சம்பூர் - திரியாய் கிராம நிலப்பிரச்சினை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி
சம்பூர் மற்றும் திரியாய் கிராம நிலப்பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்கள் வெளியிடும் நிகழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழச்சி இன்று திருகோணமலையில் (25) இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் யுத்தம் நிறைவு பெற்ற நிலையிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் நில உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.
பல சந்திப்பு
இந்தநிலையில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் பூர்வீக குடியிருப்பு மற்றும் ஜீவனோபாய நிலங்கள் அரசின் பல தரப்பட்ட பொறிமுறைகளின் மூலம் சட்ட ரீதியாகவும் எந்த விதமான சட்ட ஏற்பாடுகளும் இன்றியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வரை இம்மக்கள் நில மீட்பிற்கான பல தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எந்தக் காணிகளும் விடுவிக்கப்படாமல் மீண்டும் மீண்டும் கையகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலை தொடர்கின்றது.
குறித்த நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தில் சமீப காலமாக அதிகமாக தொடர்வதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது நில மீட்பிற்கான பல ஜனநாயக போராட்டங்கள், மாநாடுகள் மற்றும் தேசிய சர்வதேச சமூகங்களுடன் பல சந்திப்புக்களை மேற்கொண்ட போதும் இன்னும் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
மக்கள் அமைப்பு
இந்தநிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல ஆயிரம் மக்கள் நிலத்தை இழந்தவர்களாக இருக்கின்றமையினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் மற்றும் திரியாய் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்னுமொரு வடிவமாக நிலத்தை இழந்த மக்களின் வலியை சுமந்ததான இரு ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளன.
இந்தநிகழ்வானது அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்புக்களின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
காணிப் பிரச்சினை
தொடர்ந்து நிகழ்ச்சியில், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன், திருமலை மறை மாவட்ட பேராயர், கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர், திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பிராந்திய இணைப்பாளர், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தலைமையுரையை தொடர்ந்து இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பூர் மற்றும் திரியாய் கிராம மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் ஜனநாயக மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களான சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார், ஜனாப் சைபுதீன், சம்பூர் கிராம நிலப்பிரனை தொடர்பாக துஸ்யந்தன் மற்றும் பா.பிரியங்கன் ஆகியோரினால் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் கருத்துக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













