ஈழத் தமிழர்களின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர் சம்பந்தன் : ஶ்ரீகாந்தா இரங்கல்
ஈழத் தமிழர்களின் தலைவராக போருக்குப் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டு காலம் அங்கீகரிக்கப்பட்டவரான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா (N. Srikantha) தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் (R.Sampanthan) மறைவிற்கு அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தனது இளம் வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த சம்பந்தன், 1961இல் 28 வயதுடைய இளம் சட்டத்தரணியாக, தமிழரசுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது அதிகம் அறியப்பட்டிராத நிகழ்வாகும்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு
1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். 1977இல் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் அவர் நன்கறியப்பட்டிருந்தார்.
அவரின் ஆங்கில சொல்லாற்றலும் ஆளுமைப் பண்புகளும் அரசியல் அவதானிகளின் கவனத்தை தேசிய மட்டத்தில் ஈர்க்கத் தொடங்கின.
1983இல் அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்தத்தின் விளைவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், மறைந்த தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சம்பந்தனும் இணைந்திருந்த ‘மூவர் தலைமை’ இந்திய அரசின் தீர்வு நடவடிக்கைகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தது.
போருக்குப் பின்னர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 2001இல் இருந்து நாடாளுமன்றத்தில் அவர் நிதானத்துடன் வழி நடாத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ச்சியான அரசியல் ஆலோசனைகளிலும் அவர் பங்கெடுத்தார்.
போருக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் ஓர் இணக்கமான அரசியல் தீர்வுக்காக தொடர்ந்து அவர் பாடுபட்டார். ஆயினும், அவரின் முயற்சிகள் சிங்கள அரசியல் சக்திகளின் அதிகாரப் போட்டியில் அடிபட்டுப் போயின என்பது ஓர் வரலாற்றுச் சோகமாகும்.
சம்பந்தனைப் போன்ற ஓர் தமிழர் தலைவரின் காலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காணத் தவறிய பாரிய வரலாற்றுத் தவறினை, எதிர்காலத்தில் சிங்கள அரசியல் தரப்புக்கள் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். சம்பந்தனை பற்றிய உரியதோர் அரசியல் மதிப்பீடாகவும் அதுவே இருக்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |