சம்பூர் தமிழ் கலாமன்ற முத்தமிழ் விழாவில் ஆறுமுகநாவலருக்கு திருவுருவச்சிலை (படங்கள்)
சம்பூர் தமிழ் கலாமன்றம் வருடந்தோறும் நடாத்தும் முத்தமிழ் விழாவையொட்டி ஆறுமுக நாவலரின் 200 ஆவது பிறந்த ஆண்டு நினைவாக திருநிலைப்படுத்தப்பட்ட திருவுருவச்சிலை நேற்று நிறுவப்பட்டதோடு 2022ஆம் ஆண்டுக்கான முத்தமிழ் விழாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச கலாமன்ற உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது கவிஞர் கனக . யோகானந்தனுக்கு சம்பூர் தமிழ் கலாமன்றத்தின் “சம்பூரணம்” உயர் கௌரவ விருதும், சமகால இலக்கிய சூழலில் கலை இலக்கிய ஆற்றுகைகளை வழங்கும் கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் , புண்ணியாமூர்த்தி ஜெயாகாரன் ஆகியோருக்கு கலையருவி எனும் விருதும் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேல் சமூக நாடக ஆற்றுகை நடத்தும் தம்பிராசா ஜெயதாசுக்கு கலைத்தென்றல் எனும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுகனும், அருள் விருந்தினர்களாக கோப்பாய் சுப்பிரமணிய கோட்ட முதல்வர் அமெரிக்க ஹவாய் ஆதீனம் ரிசி தொண்டுநாத சுவாமிகளும், தென்கைலை ஆதீன குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனுக்கு “ சிவத்தமிழ் செல்வர் “ எனும் கௌரவ விருதும் வழங்கப்பட்டது.
ஆறுமுக நாவலரின் 200 ஆவது பிறந்த ஆண்டு நினைவாக நிறுவப்பட்ட சிலையானது சிவபூமி அறக்கட்டளையின் அன்பளிப்பாகும்.







