டயனா கமகே தாக்கப்பட்ட விவகாரம் : பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் எனும் கோட்படுக்கமைய, ஒரு ஆணாக தாம் டயனா கமகே உள்ளிட்ட அனைத்து பெண்களிடமும் இந்த விடயம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக கொழும்பு ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருந்தது.
நாடாளுமன்றில் தாக்கப்பட்ட டயனா
இந்த நிலையில், ஒரு நாட்டின் சட்டங்கள் நிறைவேற்றப்படும் முக்கிய இடமான நாடாளுமன்றத்தில் டயனா கமகே தாக்கப்பட்டமை குறித்து கவலையடைவதாக சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாயாக கருதப்பட வேண்டிய பெண்கள் தாக்கப்படுவதும் அவர்கள் பலவீனமானவர்களாக கருதப்படுவதும் தற்போது கலாச்சாரமாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்களுக்கு எதிராக விரல் நீட்டினால் கைது செய்யப்படுமளவிலான சட்டங்கள் இருப்பதாகவும் சனத் நிஷாந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
