ஜுலி சங்கை விமர்சிக்கும் சரத் வீரசேகர : உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாதெனவும் வலியுறுத்தல்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சால் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ள நிலையிலேயே, அதன் தலைவர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கையை தவறாக வெளிக்காட்டும் ஜுலி சங்
இதன் மூலம் இலங்கை தொடர்பான பாதகமான செய்தியை ஜுலி சங் உலக நாடுகளுக்கு கொண்டு செல்வதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிடக் கூடாதென தமது குழு பரிந்துரைத்திருந்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவரின் கடமை
அத்துடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் கடமைகள் என்ன என்பது குறித்து ஜுலி சங் ஆராய வேண்டுமெனவும் அதற்கேற்ப அவர் நடந்து கொள்ள வேண்டுமெனவும் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஜுலி சங் அதிகளவில் தலையிடுவதாகவும் அதனை அவர் தற்போது நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் சிறிலங்கா தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.