விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முதலாவது பாடம் புகட்டியவர் உங்கள் தந்தை- யொஹானிக்கு பொன்சேகா வாழ்த்து!
சிறிலங்கா இராணுவத் தளபதியாக அன்று பிரசன்ன சில்வாவின் வீரத்துடன் இராணுவத்தினர் வெற்றியடைந்ததைப் போன்று, இன்று சர்வதேச இசை மேடைகளில் யொஹானி டி சில்வா தாய்நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பது பெருமையும் வெற்றியும் ஆகும் என சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனிதாபிமான காரணங்களைப் போர்க் காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடத்தை பிரபாகரனுக்குக் கற்பித்தது உங்கள் தந்தையே எனவும் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தென்னிலங்கை பாடகி யொஹானி டி சில்வாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்றும் சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது,
விசேட படையணின் தளபதி என்ற வகையில் உங்கள் தந்தை பிரசன்ன டி சில்வாவை, 2006 ஆம் ஆண்டில் மாவிலாற்றை மீட்பதற்காக வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு அழைத்தேன். அதனைத் தொடர்ந்து, விசேட படையணியுடன், பீரங்கி, விமானப்படையின் உதவியுடன் மாவிலாற்று அணைக்கட்டை படையினர் மீட்டெடுத்தனர்.
அன்று மனிதாபிமான காரணங்களைப் போர்க் காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடம் பிரபாகரனுக்குக் கற்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி, வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறப்புப் படைகளை வழி நடத்தியவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, இறுதிப்போரில் 55 மற்றும் 59 ஆம் படையணி தளபதியாக முக்கிய பங்களிப்பை அவர் வழங்கினார் என்றும் பொன்சேகா தெரிவித்து, வாழ்த்தியுள்ளார்.