தவிசாளர் பதவியிலிருந்து விலகுவேன்? எச்சரிக்கும் சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமன தெரிவினையடுத்து அக்கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனத்தை அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) வழங்கியுள்ளார். இந்த அமைப்பாளர்கள் நியமனததை அடிப்படையாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதலான நிலைமை ஏற்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு காரணம் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) எனக் கூறப்படுகிறது. பாணந்துறை தொகுதிக்கான அமைப்பாளர் நியமிக்கப்படுவதில் இந்த மோதலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதியின் அமைப்பாளர் பதவியை தனக்கு நெருக்கமான நபருக்கு வழங்குமாறு பொன்சேகா அழுத்தம் கொடுத்துள்ளார். அப்படி தனக்கு நெருக்கமான நபருக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படவில்லை என்றால், கட்சியின் தவிசாளர் பதவியால் பயனில்லை என கூறியுள்ள பொன்சேகா, தவிசாளர் பதவியில் இருந்தும் விலக போவதாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்சினை அதிகரித்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பாணந்துறை தொகுதிக்கு நான்கு அமைப்பாளர்களை நியமிக்க தயாரானதாக பேசப்படுகிறது.
மோதலின் போது சரத் பொன்சேகா பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை கூட பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இறுதியில் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான நபருக்கு களுத்துறை மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.