நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல - சரத் வீரசேகர
தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையத்தை திறப்பதற்கான நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதியில் பொது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இரண்டு பொலிஸ் நிலையங்களை திறந்து இருக்கின்றேன்.
தற்பொழுது நாடு பூராகவும் 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம். அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் வடபகுதியில் இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது பொலிஸ் சேவையினை பெற்றுக் கொள்வதை நிறுத்த இதனைச் செய்துள்ளோம்.
தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது, இந்தப் பிரச்சனையை எனக்கு கூறினார்கள். அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது. எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியை இடையே நிறுத்தி வேலையில்லாது உள்ளோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் .
இங்கே உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குமிடத்து வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும்.
எனவே அமைச்சர் டக்ளசுடன் இணைந்து இந்தப் பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக நான் யோசித்துள்ளேன். அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில ஈடுபடமாட்டார்கள்.
எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
அத்தோடு புங்குடுதீவு பகுதியில் வெகு விரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும் என்றார்.