யுத்த வீரர்கள் என்பதற்காக கொலைகளைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!
யுத்த வீரர்கள் என்பதற்காக இராணுவத்திற்கு கொலைகளை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் கொலைகாரர்களை காப்பாற்றும் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் தொடரும் ஜனநாயக விரோத அடக்குமுறைகள் மற்றும் சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இங்கு ஜனநாயக விரோத அடக்குமுறைகள் தொடர்வதை அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கின்றார்.
அதனைவிட அசேல சம்பத் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். வீதியில் சென்ற நபர் ஒருவர் ஒலி எழுப்பினார் என்ற காரணத்திற்காக கைது செய்தமையை வீரச் செயலாக காட்டிக்கொள்கின்றார்கள். இவற்றை மிகமுக்கியமான விடயங்களாக நாம் காணவில்லை.
கரண்ணாகொட 11 பேரை கொலை செய்த விடயத்தை தெரிவித்த போது நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு உறுப்பினர் பல விளக்கங்களை கொடுத்தார். யுத்தத்தில் சிறப்பாக ஈடுபட்டார் என்பதற்காக மனித படுகொலையை செய்வதற்கு யாருக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் எனவும் நீங்களும் நாளை அதற்கு ஆளாகலாம் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்தமைக்காக கொலைகளை செய்ய முடியாது. கொலைகாரர்களை பாதுகாக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலைகாரரான சுனில் ரத்நாயக்கவிற்காக அனுதாபப்பட முடியாது. தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
யுத்தத்தை நடத்தியது யாரென மக்களுக்கும் தெரியும். நான் யுத்தத்தை சரியாக செய்தமையால் தான் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தார்கள். ஆகவே தமிழ் மக்கள் இராணுவத் தளபதிக்கு வாக்களித்தார்கள் எனின் இது தொடர்பில் நாம் பெருமைப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.