ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான மொஹமட் சாகீர், மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடல்நலக் குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பிரதிவாதியொருவர் மருத்துவமனையில்
இதனால், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதன் காரணமாக, இன்றைய தினம் சாட்சிய விசாரணைகள் இடம்பெறவில்லை. மேலதிக சாட்சிய விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்தபோது, சதொச நிறுவன ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வமான கடமைகளிலிருந்து விலக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இன்றைய விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஏனைய இரு பிரதிவாதிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |