முல்லைத்தீவு மக்களுக்காக கடும் கரிசனை காட்டும் ஸ்ரீலங்கா இராணுவ தளபதி
முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டுமென ஸ்ரீலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Savendra silva) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவ தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினருக்கான வருடப்பிறப்பு சிறப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மக்களின் சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலை நம்பி, பல சவால்களுக்கு மத்தியில் வாழ்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எனவே, அவர்களுக்கான சமூக நிவாரணப் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முல்லைத்தீவு மக்களை போதைப்பொருள் பாவனை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, அந்த மக்களுக்கான நிதி உதவிகள், மத ஸ்தலங்களை புனரமைத்தல், விளையாட்டு மைதான வசதிகளை மேம்படுத்தல், பொதுச் சேவைகளை வலுப்படுத்தல் என்பவற்றிற்காக படையினர் முன்னெடுத்து வரும் சேவைகள் பாராட்டத்தக்கது எனம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கான பங்களிப்புக்கள், வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதற்காகவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு இராணுவத்தளபதி நன்றி கூறியுள்ளார்.
அதேபோல் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான பயிற்சிகளை பெற வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமென ஸ்ரீலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.