புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மானியங்களை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள்வாத அரசாங்கம்
ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் உரிமையாக இருக்க வேண்டிய ஒன்று. அது ஒரு சலுகை அல்ல. இப்போது அது படிப்படியாக மக்களின் உரிமையாக மாறி வருவதைக் காண்கிறோம்.
இருப்பினும், கடந்த காலங்களில், இந்த ஜனாதிபதி நிதியின் தவறான பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் உட்பட பல்வேறு இடங்களில் பேச்சுக்கள் எழுந்தன.இப்போது அந்த சகாப்தம் முடிந்துவிட்டது.
ஒரு மக்கள்வாத அரசாங்கம் நிறுவப்பட்ட இந்த நேரத்தில், மக்கள் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
சாதாரண தர, உயர் தர மற்றும் பல்கலைக்கழக கல்வி அல்லது தொழிற்கல்வி பெறும் பிள்ளைகளுக்கு மாதத்திற்கு ரூ. 5000, 7000 மற்றும் 8000 போன்ற உதவித் தொகையினை வழங்குவது மிகவும் முக்கியம்.
குறிப்பாக அவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பல்வேறு பிரச்சனைகள், வேலை செய்யும் இடத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டால், சம்பளம் சரியாகப் பெறப்படாவிட்டால், அந்தக் குடும்பம் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குழந்தைகளுக்கு உதவித்தொகை
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்தக் குடும்பம் பலவீனமடைகிறது. குழந்தைகளின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அவ்வாறில்லை எனில் அனர்த்தங்கள், விபத்துகள் அல்லது சிறைவாசம் என்ற சூழல் உருவாகலாம்.
பல்வேறு சூழ்நிலைகளில் குழந்தைகளின் கல்வி உரிமை மீறப்பட்ட வழக்குகள் உள்ளன.
ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும் என்பதுடன் அதற்கு தேவையான சூழல் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.இது இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செயல்படுத்தப்படுகின்றது.
2025 ஜனவரி 01 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டால், அவர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியின் பெரும்பகுதியைக் கொண்டு வருகிறார்கள்.
எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது மிகவும் பெறுமதி மிக்க ஒருவிடயமாக இருப்பதாக பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
