முல்லைத்தீவில் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியர்
பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில் தாக்கியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல்
இந்நிலையில் குறித்த மாணவன் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்பட்ட ஆசிரியருடன் பெற்றோர் சந்திப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதிபர் குறித்த ஆசிரியருடன் தாம் பேசுவதாக தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தமது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியர் தம்முடன் கலந்துரையாடாத நிலையில் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்திய நிலையில் காவல்துறையினர் நேற்றைய தினம் குறித்த மாணவனையும் பெற்றோரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளனர்.
இதன் போது குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |