யாழில் கரப்பான் பூச்சியுடன் வடை..! உணவகம் மற்றும் தயாரித்த சமையற்கூடம் என்பன சீல் வைப்பு
யாழ்.நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டதுடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ். நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் கடை உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த கடையினையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக உடன் சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்தார். வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதிக்கு நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கடையும், சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,