கொழும்பில் இரகசிய ஆயுதக்கிடங்கு! தலைமறைவான தம்பதியினர் குறித்து காவல்துறையின் அறிக்கை
பேலியகொட குற்றப்பிரிவினரால் கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
இவற்றில் 19 உள்ளூர் கைத்துப்பாக்கிகள், பல்வேறு பாதாள உலகக்கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (03) காலை சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன், இந்த ஆயுதங்களுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு இலட்சம் போதைப்பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தெமட்டகொட பகுதி
இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் செவனகல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தெமட்டகொட பகுதியில் சில காலமாகத் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த கைத்துப்பாக்கிகள் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு, தெமட்டகொடவில் உள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒரு இரகசிய பதுங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்ட நேரத்தில், அந்த வீட்டில் இருந்த ஒரு இளம் தம்பதியினர் காவல்துறையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இளம் தம்பதியினர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பேலியகொட குற்றப் பிரிவுக்குத் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டுத்தயாரிப்பு கைத்துப்பாக்கிகள்
இதன்போது கைப்பற்றப்பட்ட 19 உள்நாட்டுத்தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் நல்ல நிலையில் இருந்ததாகவும், அவை டி-56 ரக தோட்டாக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்றும் காவல்துறை கூறுகின்றது.

தற்போது வெலிசர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் தெமட்டகொட சமிந்தவின் மகனுடன் இவை தொடர்புடையவை என்றும், சமிந்தவின் மகன் துபாயில் தங்கியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டு, விரிவாக விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் சிறப்பு அதிரடிப் படையும் காவல்துறைக்கு உதவியுள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பில் இவ்வளவு பெரிய அளவிலான துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என காவல்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 12 மணி நேரம் முன்