ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் 23,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக என பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வரும் 2027 ஆம் ஆண்டாகும்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.
ஆசிரியர் பற்றாக்குறை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய, 23,000 புதிய ஆசிரியர்களைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இந்த ஆசிரியர் நியமனங்களைச் செய்து முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2027 ஆம் ஆண்டாகும்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைக்க முடியும்.
பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நின்றுபோயுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதி மேம்பாட்டுத் திட்டங்களை மிக விரைவாக நிறைவு செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2027 ஆம் ஆண்டு முதல் புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டவட்டமான வரைபுகளை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வருகின்றது.
இலங்கையின் கல்வித்துறை
ஒவ்வொரு பிள்ளைக்கும் அன்பு, பாதுகாப்பு மற்றும் அரவணைப்புடன் கூடிய உன்னதமான இடமாகப் பாடசாலையை மாற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் முழு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறது.

நெருக்கடிமிக்கச் சூழல்களிலும் இருக்கும் வளங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்து, கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அதிபர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
இலங்கையின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொண்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வித்துறையை மாற்றுவதற்கான நிலையான நீண்டகாலத் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் உள்ளது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 12 மணி நேரம் முன்