தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புச் செயலர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் தேசிய பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்தார்.
புத்தாண்டின் முதல் நாள் பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளது.
இந்தச் சவாலான சூழ்நிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்காக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
இது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை சார்ந்த மறுக்க முடியாத சாதனை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.