சிவராத்திரி நாளன்று கிடைக்கும் பலாபலன்கள் என்னென்ன தெரியுமா!
மகாசிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று எம்பிரான் ஈசனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபூஜை செய்த புண்ணியம் வந்து சேரும். மேலும், மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகம்.
மாசிமாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வழிபட்டதால் இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது,அதன்படி இந்த ஆண்டு (2024) மகா சிவராத்திரி விழா மார்ச் 8ம் திகதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது.
நாளைய தினம் இரவு 08.20 மணி முதல், நாளை மறுநாள் மாலை 6 மணி வரை சதுர்த்தசி திதி இருப்பதால், இதனால் நாளை இரவு 08.30 மணிக்கு பிறகே சிவராத்திரி பூஜையை ஆரம்பிப்பது உசிதமாக இருக்கும்.
விரதத்தை முடிக்க வேண்டும்
சிவராத்திரியில் முழு விரதத்தையும் கடைபிடித்தால் சிவபெருமான், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது நம்பிக்கை, மேலும் இந்நாளில் சிவபெருமானுக்கு பிரசாதமாக பால், வில்வ இலைகள், சந்தன கலவை, தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றை படைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். விரதத்தின் பலனை பெற, சூரிய உதயத்திற்கும் சதுர்த்தசி திதி முடிவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும்.
இப்படி 24 ஆண்டுகள் சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் சிவகதி அடைவார்கள் என கூறப்படுகிறது. மேலும், அவர்களின் ஏழு தலை முறைகளும் பாக்கியம் பெற்று முக்தி அடைவதாக புராணங்கள் கூறுகின்றன.
தானம் செய்வது நல்லது
இவ்வாறு சிவராத்திரி நாளில் முழு விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜையை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்கள் சாப்பிடலாம். ஆனால் அரிசி, கோதுமை, பருப்பு போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும் மேலும் சிவராத்திரி நாளன்று ஏழைகளுக்கு அரிசி, சர்க்கரை, பால், கருப்பு எள் போன்றவற்றை தானம் செய்வது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |