இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ள தமிழர் தரப்பின் நிலைப்பாடு
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்டு வரும் ஆவணத் தயாரிப்பிலிருந்து ஒருபோதும் பின்வாக்கப் போவதில்லையென அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Nokarathalingam) தெரிவித்தார்.
ஆவணத் தயாரிப்பிலிருந்து எந்தக் கட்சி விலகினாலும், அந்தக் கட்சியை விலக்கிவிட்டு ஏனைய கட்சிகளை ஒன்றிணைந்து ஆவணத்தின் இறுதி வரைபை நிறைவு செய்யவுள்ளதாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“அனைத்துக் கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரைத் தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரியவரும். ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.
இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால், அல்லது கையொப்பம் இடமறுத்தால், அது யாராக இருந்தாலும் அவர்களை விலக்கிவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.
வார்த்தைப் பிரயோகங்களை சாட்டாக வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப் பின்னால் நாங்கள் செல்வதா என்ற சிறுபிள்ளைத் தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 ஆவது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தைப் பிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ்தேசியக் கட்சிகளும் செயற்படவேண்டும்.
அந்த வகையிலேயே இந்த முயற்சியினை நாம் எடுத்துள்ளோம். இது நிச்சயம் வெற்றிபெறும்” என்றார்.