காவல்துறைக்கு வரவுள்ள தனியான சம்பள கட்டமைப்பு
காவல்துறை சேவைக்கான தனி சம்பள அமைப்பைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) தெரிவித்துள்ளார்.
2026 வரவு செலவுத் திட்டத்திற்கான பொருத்தமான திட்டங்களை ஜனாதிபதியிடம் தெரிவிக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சி
காவல்துறை சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழு எழுப்பிய கேள்விககளுக்கு பதிலளித்த விஜேபால, தற்போது பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சித் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பல்வேறு முறைகேடுகள் மற்றும் சில சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள காவல் நிலையங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பதில் காவல்துறை மா அதிபருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரான அமைச்சர் ஆனந்த விஜேபால, இவை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்குபவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
