அநுர அரசாங்கத்தில் பிடிபட்ட சுறாக்கள்!
பாதாளக் குழுக்களை ஆட்சியாளர்கள் பாதுகாத்தார்கள் என்றும், இதன் விளைவை இன்று முழு நாடும் எதிர்கொள்கிறது எனவும், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு தான் எதிர்தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, யுக்திய சுற்றிவளைப்பில் நெத்தலி மீன்களை பிடித்ததை போன்று நாங்கள் செயற்படவில்லை. சுறாக்களை பிடித்துள்ளோம் என சுனில் வட்டகல சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகம பகுதி
மஹரகம பகுதியில் நேற்று(09.11.2025) நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதை எந்த பெற்றோரும் விரும்புவதில்லை. போதைப்பொருள் ஒழிப்புப்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
பாதாள குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அரசியலமைப்பு சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள்.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பாவனை
அத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்தால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோன் யுக்திய சுற்றிவளைப்பினை மேற்கொண்டார். இந்த சுற்றிவளைப்பில் நெத்தலி மீன்கள் மாத்திரமே அகப்பட்டன. சுறாக்கள் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு அமைய பாதுகாக்கப்பட்டன” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |