பிணை நிராகரிப்பு: மீண்டும் சிறை செல்லும் சஷீந்திர ராஜபக்ச!
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (29) உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முற்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, அவரின் தந்தையான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சாமர சம்பத் ஆகியோரும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்ததற்காக இழப்பீடாக ரூ. 8,850,000/- ஐ சட்டவிரோதமாகப் பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் "ஊழல்" குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

