விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்ச என அழைக்கப்படும் ரணசிங்க முதியன்சேலாகே ஷிர்ஜா உதயந்தியின் தண்டனை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஷஷி வீரவன்சவின் தண்டனை தொடர்பான நடவடிக்கைகளை இம்மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
குறித்த வழக்கின் பிரதிவாதி மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பான நடவடிக்கைகளின் பதிவுகளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதிவாதி தரப்புக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேன்முறையீட்டு வழக்கு இன்று (12) மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்ததால், வழக்கை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், குறித்த தீர்ப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |