கொழும்பு கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள 300 இராணுவத்தினர்
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் விசேட ஆலோசனைக்கமையின்படி, விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியான கழிவுகளை அகற்ற 300 இராணுவத்தினர் நீர்கொழும்பு கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளாகியுள்ள கப்பலிலிருந்து பெருமளவான பொருட்கள் கடலில் விழுந்து கரையொதுங்கியுள்ளன. அவற்றினை பொது மக்கள் எடுத்துச் செல்லும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இராணுவத்தினை ஈடுபடுத்தி அவற்றை அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் இராணுவத்தின் பீரங்கி படை, வெடி குண்டு அகற்றும் படை மற்றும் ட்ரோன் படை உள்ளிட்டவை ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அதற்கமைய நீர்கொழும்பு கடற்கரையில் 6 கிலோ மீற்றர் வரை இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வடமேற்கு கடற்கரைப் பகுதியில் கப்பலிலிருந்து கரையொதுங்கிய இரசாயன பொருட்களை மக்கள் சேரிப்பதாக பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டதோடு, இவ்வாறு கரையொதுங்கிய பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் கோரப்பட்ட நிலையிலேயே இன்றையதினம் இராணு வீரர்கள் அப்பணியில் இணைந்தனர்.
இதன் போது கடல்கரை மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து ஆராயுமாறு மேற்கு பாதுகாப்பு படைதளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகேவிற்கு ஆலோசனை வழங்கியதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



