நாட்டில் எரிபொருள் தட்டுபாடு-எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தும் ஆளும் தரப்பு!
இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகளில் மக்களும் வாகனங்களும் காத்திருக்கும் நிலைமையை எதிர்கட்சியினரே ஏற்படுத்தியுள்ளதாக ஆளும் பொதுஜன முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சியினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை. வாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்தத்திட்டத்தை நாட்டின் நிலைமையை பொருட்படுத்தி ஒத்திவைக்கும்படி கூறினார்கள்.
நேற்றைய சந்திப்பில் அதுகுறித்துபேசப்பட்ட போதும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நாட்டின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மை பற்றி அமைச்சரிடம் நான் கேட்டேன்.
எதிர்கட்சியினரால் எரிபொருள் விலையேற்றம் பற்றிய தவறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அதனால் தான் நாளாந்தம் எரிபொருள் கொள்வனவு செய்வோர் தேவைக்கும் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்ய முந்திக்கொண்டதால் தான் தட்டுப்பாடு நிலவியது எனவும் தெரிவித்துள்ளார்.