உச்சம் தொடும் உப்பின் விலை...! அசமந்தமாக அரசு - குப்பைக்கு போது உணவு பொருட்கள்
புதிய இணைப்பு
உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை என உப உணவு பதனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னராக இருந்து இந்த நிலைமை நீடித்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலேயே 60 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கல் உப்பு சமீப சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக விலை அதிகரித்து தற்போது ஒரு கிலோ 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உணவுகளை பதனிட முடியவில்லை
உப்பு விலையின் இந்த அசுர அதிகரிப்பினால் உப்பைக் கொண்டு பதனிடப்படும் உப உணவுகளை பதனிட முடியவில்லை என்று உணவு பதனிடுவோர் அங்கலாய்க்கின்றனர்.
இதேவேளை, அதிக விலை கொடுத்து உப்பை வாங்கி உப்பைப் பிரதானமாகக் கொண்டு பதனிடப்படும் மோர் மிளகாய், ஊறுகாய், உப்புக் கருவாடு ஆகியவற்றை பதனிட முடியாததால் ஒரு புறத்தில் உப்புக் கருவாடு மோர் மிளகாய் ஊறுகாய் என்பனவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில், மிளகாய் கருவாடு தயாரிக்கப் பயன்படும் நெத்தலி, அய்யா மாசி, கூனி இறால், கட்டாப்பாரை போன்ற மீன்கள், தேசிப்பழம் என்பனவற்றை விற்பனை செய்ய முடியவில்லை என்று விவசாயிகளும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மிளகாய் உற்பத்தி செய்யப்படும் சில பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மிளகாய் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குப்பையில் கொட்டவேண்டிய நிலை
இதேபோன்று கருவாட்டுக்காக சிறு மீன்களைப் பிடிப்போரும் உப்புக் கருவாடு தயாரிக்க முடியவில்லை என்பதால் சில நேரங்களில் பிடிக்கப்படும் மீன்களை விற்க முடியாததால் அவற்றைக் குப்பையில் கொட்டவேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
ஒட்டு மொத்தத்தில் உப்பு விலை உயர்வினால் விவசாயிகளும், மீனவர்களும், இல்லத்தரசிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட உப்புப் பற்றாக்குறையை நீக்க இந்தியாவிலிருந்து 30 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அது பெப்பரவரி மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேர்ந்து விடும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
இலங்கை (Srilanka) சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகார சபைக்கு முறைப்பாடு
இதேவேளை, சந்தையில் உப்பு ஒரு கிலோகிராம் உப்பு 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உப்பு விலை தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உப்பு விநியோகம்
இந்நிலையில், உப்பு விநியோகம் குறித்து வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.
179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் (10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
