அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி (Kandy) மற்றும் நுவரெலியா (Nuwara-Eliya) மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்.
பலத்த மழைவீழ்ச்சி
அத்துடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் (Mannar), காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை (Trincomalee) மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
பலத்த காற்று
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதேவேளை, கற்பிட்டி (Kalpitiya) முதல் கொழும்பு (Colombo), காலி மற்றும் ஹம்பாந்தோட்டை (Hambantota) ஊடாக பொத்துவில் (Pottuvil) வரையான கடற் பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் இதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |