அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு பணிப்பு : சிறீதரன் வெளியிட்ட தகவல்
அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தனக்கு தனிப்பட்ட ரீதியில் உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் அறிவிக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு குறித்து ஐபிசி தமிழ் செய்திப்பிரிவு அவரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அண்மையில் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் சிறீதரன் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த விடயம் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலக வேண்டும் என்று தனக்கு உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் தமிழரசுக்கட்சி ஊடக அறிவிப்பினை மட்டுமே விடுத்துள்ளதாகவும் கடிதம் கிடைத்தால் மட்டுமே மேலதிக விடயம் தொடர்பில் தான் தெரிவிக்க முடியும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |