முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறப்புற இடம்பெற்ற வயல்விழா - விவசாயிகளுக்கு பாராட்டு
முன்மாதிரி விவசாயத் துண்டம்
முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், புத்துவெட்டுவான் பகுதியில் சியாப் திட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட முன்மாதிரி விவசாயத் துண்டம் மற்றும் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சேதன உர ஊக்குவிப்பு திட்ட மாதிரிகள் பார்வையிடப்பட்டு அதன் பயன்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வட மாகாண பிரதம செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்கள், சியாப் திட்டப் பணிப்பாளர்கள், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலின் கீழ் விவசாயிகளுடன் நேரடியான கலந்துரையாடல் நேற்று(16) இடம்பெற்றது.
வயல் விழா
இக்கலந்துரையாடலில் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சினைகளை சீர்செய்து தருமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, தற்போது விவசாயத் திணைக்களத்தினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட MICH - ஹைப்றிட் 1 மிளகாய் இன அறுவடை விழா மற்றும் ஐயன்கன்குளம் பகுதியில் செய்கையிடப்பட்ட நிலக்கடலை அறுவடை விழா, குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிழங்கு பயிர்ச்செய்கை ஆகியன வயல் விழாவாக மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய திட்டங்களை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பயன்பெற்ற விவசாயிகள் திட்டத்தை மேற்பார்வை செய்யும் போதனாசிரியர் மற்றும் வருகை தந்த அதிகாரிகளிடம் தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


