அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு தரப்பினரதும் ஆதரவுடன் குறித்த போராட்டம் இன்று (08.01.2025) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
குறித்த கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா , வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், போராளிகள் நலன்புரி சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |