திருத்தந்தையை சந்தித்த சிங்கப்பூர் அதிபர்
இத்தாலிக்கு (Italy) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் (Singapore) அதிபர் தர்மன் சண்முகரத்னம் (Tharman Shanmugaratnam) திருத்தந்தை பிரான்சிஸை (Pope Francis) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று ( 22) ரோமில் (Rome) இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது ரோம் பயணத்தின்போது புனித போப் பிரான்சிஸ் அவர்களை எனது மனைவியுடன் இன்று காலை தனிப்பட்ட பார்வையாளர்களாக சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
சமய நல்லிணக்கம்
பல சமய நம்பிக்கைகளுக்கு இடையே நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சிங்கப்பூரின் தொடர் முயற்சிகளை பகிர்ந்து கொண்டேன். இவ்வாண்டு செப்டம்பரில் சிங்கப்பூருக்கு வரும் திருத்தந்தை பிரான்சிஸை வரவேற்க நாங்கள் எல்லாரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என அதிபர் தர்மன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உலகில் போருக்கும் மனிதகுலத்திற்கு ஏற்படும் இன்னல்களுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய அவசியம் குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் அதிபர் திருத்தந்தையுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2016க்குப் பிறகு சிங்கப்பூர் அதிபர் ஒருவர் இத்தாலிக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.