மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமித்து கஞ்சா விளைவிக்கும் சிங்களவர்கள்
சிறிலங்காவில் சிங்களர்வர்களின் ஆக்கிரமிப்பு என்பது தமிழ் மக்களின் நிலங்கள், ஆலயங்கள் எனப் பல்வேறு தளங்களில் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையிலான ஓர் ஆக்கிரமிப்பாகவே கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ் பண்ணையாளர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளில் பொலன்னறுவை மற்றும் அம்பாறையில் இருந்து வருகைதந்த சிங்களவர்கள் அந்த நிலங்களை ஆக்கிரமிக்கின்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.
இருந்த போதிலும் காலத்திற்கு காலம் நீதிமன்ற தலையீடுகளால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவதும், பின் மீண்டும் ஆக்கிரமிப்புகளை தொடர்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பிரதேசத்திற்கு சென்ற சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியாலளர்கள் அங்கிருந்த பிக்கு மற்றும் சிங்களவர்களால் தடுத்து வைக்கப்பட்டமை பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு என்ன நடக்கிறது, இந்தப் பிரச்சினையினுடைய பின்னணி என்ன ? யார் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் , போன்ற கேள்விகளுக்கும் அதேபோல சிறிலங்காவின் மகாவலி அபிவிருத்திச் சபை மற்றும் வனஜீவராசிகள் திணைகளம், காவல்துறை என்பன தொடர்ந்தும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற நிகழ்வுகள் எனப் பல்வேறு விடயங்களை ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் விரிவான கருத்துக்களாக பகிர்ந்துகொள்கிறார் .
அதுமட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தமிழர் நிலங்களில் கஞ்சா விளைவிப்பதாகவும், இதுவரை சுமார் 2500 இற்கும் அதிகமான மாடுகளை சுட்டுக்கொன்றிருப்பதாகவும் இது தொடர்பாக கேட்கச்சென்ற இளைஞர்கள் கட்டி வைத்து தாக்கப்பட்டதாகவும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.