சினோபெக் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு: 95 ஒக்டேன் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் சீன நிறுவனமான சினோபெக், தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் தினசரி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறிப்பாக 95 ஒக்டேன் ரக பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எரிபொருள் பெற்றுக்கொள்ளச் செல்லும் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர்
நாட்டின் பல பகுதிகளில் உள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இந்த விநியோகக் கட்டுப்பாடு தொடர்பான அறிவித்தல்கள் சிவப்பு நிறப் பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“சினோபெக் நிறுவனம் தனது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் வழங்கும் எரிபொருள் அளவைக் கட்டுப்படுத்தியுள்ளதால், எரிபொருள் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்” என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் விநியோக முனையத்திலிருந்து கிடைக்கும் எரிபொருள் இருப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், நாளாந்தம் கோரப்படும் எரிபொருள் அளவு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமது வழக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |