சிரிலிய சவிய கணக்கு முடக்கத்தால் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக ராஜபக்ச தரப்பின் ஒரு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீதான விசாரணை திருப்பங்கள் பல்வேறு விடயங்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி வருகின்றன.
சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணித்த சிரந்தி நாடு திரும்பிய மறுநாள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அமைய சிறைப்படுத்தப்பட்டார்.
இந்த விவகாரத்தை மையப்படுத்தி எழுப்பப்படும் கேள்விகள் மோசடியில் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
அனுதாபத்தைப் பிரசாரங்கள்
இந்நிலையில் சிரிலிய சவிய வழக்கு ஆரம்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு ராஜபக்ச தரப்பால் அப்போது எழுப்பப்பட்ட கருத்துக்கள் குறித்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘சிரிலிய சவிய’ அமைப்பு தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ராஜபக்ச தரப்பின் ஒரு அறிக்கையில், சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், அந்த அமைப்பின் நிதியுதவியைப் பெற்று வந்த மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவலை 2015 ஜூன் 1ஆம் திகதி தென்னிலங்கை இணையதளம் ஒன்று செய்தியாக வெளியிட்டிருந்தது.
வாக்குமூலம் அளித்த ஷிரந்தி
அதில் ''வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதன் காரணமாக, அந்த அமைப்பின் நிதியுதவியைப் பெற்று வந்த மூன்று நோயாளிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாக, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்திருந்தார் என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொழும்பு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்ததாக, மகிந்த ராஜபக்சவின் அப்போதைய ஊடக தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிரிலிய சவிய அமைப்பு தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஷிரந்தி வாக்குமூலம் அளித்ததாகவும், அந்த அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் பொருள் நன்கொடைகளின் அடிப்படையில் செயற்பட்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அமைப்பின் செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தின் நிதியோ சொத்துக்களோ பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
ராஜபக்ச அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கியின் கணினி முறைமையில் ஷிரந்தி உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களைப் பதிவு செய்தபோது தவறுதலாக விடுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சிரிலிய சவிய அமைப்பின் சார்பில் காசோலைகளில் கையொப்பமிட்டவர்கள் போலியான நபர்கள் அல்லர் என்றும், அப்போது அந்த அமைப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த உண்மையான மூன்று அதிகாரிகளே கையொப்பமிட்டதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |