அரசியல் பழி வாங்கலின் முழு வடிவமே ரணிலின் கைது : அநுர அரசை சாடும் தயாசிறி
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தால் விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் ரணிலின் கைது அரசியல் பழிவாங்கலின் முழு வடிவம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”அரசாங்கத்தின் அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை தோற்கடிக்க அரசியல், கட்சி பேதமின்றிய வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அத்துடன் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்துச் செய்தார்.
2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த போது தனிமனிதனாக சவால்களை பொறுப்பேற்று நாட்டை குறுகிய காலத்தில் மீட்டெடுத்தார். அந்த கௌரவத்தை அவருக்கு வழங்க வேண்டும்.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் சூழலை இந்த அரசாங்கத்துக்கு ரணில் விக்ரமசிங்க தான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.
அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு குழு ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தான் உள்ளார்கள். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்கள்.
நீதித்துறைக்கு விடுத்த கடும் அச்சுறுத்தல்
பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இந்த கண்காணிப்பை 'பி.ஆர்'என்பவர் தான் வழிநடத்தியுள்ளார். ஆகவே இது அரசியல் பழிவாங்கலின் முழு வடிவத்தையும் வெளிப்படுத்துகிறது.
சுதத்த திலகசிறி எனும் யூடியுபரின் செயற்பாடு நீதித்துறைக்கு விடுத்த கடும் அச்சுறுத்தலாகும். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நபர் 'ரணில் விக்ரமசிங்க 14 நாட்கள் சிறை செல்வார், அவ்வாறு நடக்காவிடின் தான் யூடியூபர் தொழிற்றுறையில் இருந்து விலகுவதாக' குறிப்பிட்டுள்ளார்.
இவர் மக்கள் விடுதலை முன்னணிக்காகவே செயற்படுகிறார். இவ்வாறான கருத்துக்களினால் நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்றதொரு செயற்பாடு.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 23 மணி நேரம் முன்
