சஜித்தின் இந்திய பயணம் : போலி செய்திகளை நிராகரித்த ஐ.ம.ச!
ஐக்கிய மக்கள் சக்தி இந்தியாவிற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளை அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.
இதற்கு இந்தியா சாதகமாக பதிலளித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
அனுரவின் இந்திய பயணம்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, அந்த நாட்டின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டதை போன்று தமக்கும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொய் செய்திகள்
இந்த பின்னணியில், குறித்த செய்திகளில் உண்மை இல்லை என அந்த கட்சியின் உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு எந்தவித கோரிக்கைகளுமின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சஜித் பிரேமதாச யாரிடமும் அனுமதி கோர தேவையில்லை என முஜிபர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |