ஈழத்தமிழ் அகதிகள் குறித்து சிறிலங்கா அரசின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள தீர்மானங்கள் பற்றி இன்னும் கலந்துரையாடப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து அங்கு அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள்பற்றி தமிழ்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பற்றி நேற்று நடந்த அமைச்சரவையில் பேசப்படவில்லை.
அண்மைய காலங்களாக நாடு திரும்ப விரும்பிய ஈழத்தமிழர்கள் இந்தியாவிலிருந்து படிப்படியாக அழைத்துவரப்பட்ட போதிலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அந்நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள இலங்கை ஏதிலிகள் பற்றி தமிழ்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பற்றி சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சும், முடிவும் எடுக்கவில்லை என்றார்.