தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும் எரிவாயு - அமைச்சர் வெளியிட்ட ஆதாரங்கள்
மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்காக இலங்கை தனது வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்வதற்காக வழங்கியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது.

அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும். மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது.
இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வாக அமையும்
இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |