இலங்கை கிரிக்கெட் தடை நீக்கம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்ட (ICC) இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைநிறுத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஐசிசி பிரதிநிதிகள் திருப்தியடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் இலங்கையின் இடைநிறுத்தத்தை நீக்குவதற்கு உறுதியளித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம்
அதேவேளை, ஐ.சி.சி பிரதிநிதிகள் இலங்கையின் விளையாட்டு அரசியலமைப்பு பற்றி அறிந்திருப்பதாகவும், ஐ.சி.சி நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய விளையாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு
ஐசிசியின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், ஐசிசியால் இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டமை சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் பெர்னாண்டோ மேலும் கூறுகையில், வீரர்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில் தற்போதைய அதிக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் SLC இன் நிர்வாக மற்றும் பயிற்சி கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |