இலக்கு வைக்கப்பட்ட கோட்டாபயவின் சகாக்கள் - சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை
போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதைப் போன்று, மோசடிகளில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்படவேண்டுமெனவும், அனைவருக்கும் சமனான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவதுவல தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபரின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஜே.சி.அலவதுவல தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அமைதியான போராட்டத்தின் ஊடாகவே இந்நாட்டு மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய தலைவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்ட முடிந்தது.
சில அரசியல் கட்சிகள் பதுங்கியிருந்து உரிமைகளை பறித்ததால் தான் போராட்டம் நடத்தப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
போராட்டத்தின் போது சில இடங்களில் சில சிறிய விடயங்கள் நடந்ததையும், அதிபர் மாளிகையில் உள்ள பொருட்கள் சேதங்களுக்காக அனைவரும் கைது செய்யப்பட்டதையும் பார்த்தோம். இவர்களுக்கு சட்டம் கடமையை செய்தால் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் சட்டத்தை பிறப்பித்து கைது செய்யுங்கள். சட்டம் எல்லோருக்கும் நியாயமாக இருக்க வேண்டும்.
சட்டம் அதனது கடமையை செய்ய வேண்டும்
அதிபரின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு சட்டம் அதனது கடமையை செய்ய வேண்டும்.
இவர்கள் தான் அதிபருக்கு தவறு செய்ய ஆலோசனை வழங்கியவர்கள். தீர்மானங்கள் மேற்கொண்டவர்கள். இவர்களை முதலில் கைது செய்ய வேண்டும். அவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
