மிஹிந்தலை ரஜமஹா விகாரையிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் : பிரமித்த பண்டார தென்னகோன் தகவல்
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் உள்ள பாதுகாப்பு படையின் அதிகாரிகளை மீள பெற்றுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த விகாரைக்கு அருகில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவம், கடற்படை மற்றும் குடிசார் பாதுகாப்பு படையின் 251 அதிகாரிகளை மீள பெற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்
குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த விகாரைகளில் உள்ள பாதுகாப்பு படையினரை மீள பெற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்கும் வகையில் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என விகாராதிபதி கருதுவதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தம்மரத்தன தேரரால் குற்றம் சாட்டப்பட்ட இரு அதிகாரிகளும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விகாரையின் பாதுகாப்பு
விகாரையின் பாதுகாப்பையும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இராணுவ வீரர்கள் குறித்த விகாரையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், மிஹிந்தலை விகாராதிபதியின் குற்றச்சாட்டு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து அதிகாரிகளும் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |