நாடு கடந்த தமிழீழ அரசுடன் இலங்கை அரசு பேசுமா...
கடந்த மாவீரர் தினத்தன்று துவாரகா தோன்றி மாவீரர் தின உரையாற்றுகிறார் என்கிற செய்தி துவங்கி, இமாலயப் பிரகடனம் செய்யப்பட்டது என்கின்ற செய்தி வரையில், ஈழத் தமிழ் மக்களை சுற்றி பல சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை உணர முடிகின்றது.
ஈழத் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கும் தாயகத்திற்கும் அதன் உரிமைக்குமாய் போராடிய நிலையில், இனப்படுகொலை என்ற பெருங்காயத்திற்குள் இருந்து மீள முடியாத வலியுடன் இருக்கின்ற காலத்தில், தாயக மக்களிடம் தீர்வு குறித்தும் நீதி குறித்தும் பேசாத இலங்கை அரச தலைமை எப்படி புலம்பெயர் தேச அமைப்பு ஒன்றுடன் மாத்திரம் பேசி தீர்வை காணப்போகிறது என்கின்ற அடிப்படைக் கேள்விதான் முதலில் எழுகிறது.
சாயம் வெளுத்த போலித் துவாரகா
கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார், விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்ற செய்தி உலகப் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உலகத் தமிழ் மக்கள் அனைவரது இதயங்களிலும் பெரும் இடத்தை வகிக்கும் உன்னதமான தலைவராக மேதகு பிரபாகரன் இருக்கிறார். அவரின் பெயரை வைத்து ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலை பின்ன சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டன.
என்ற போதும்கூட அந்தச் செய்தி வெளியாகிய மறுநிமிடங்களிலேயே அந்த செய்தியின் பின்னால் யார், எந்த நோக்கத்திற்காக செயற்படுகிறார்கள் என்பதை ஈழத் தமிழ் சமூகம் உணரவும் வெளிப்படுத்தவும் தலைப்பட்டது.
இந்த நிலையில் இம்முறை மாவீரர் தினத்தன்று, தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா தோன்றி மாவீரர் தின உரை நிகழ்த்துகிறார் என்கிற செய்தி வெளியாகியிருந்தது. அதேபோல போலித் துவாரகா ஒருவர் யூடியூப் அலைவரிசை ஒன்றின் வழியாகத் தோன்றி மாவீரர் தின உரையை நிகழ்த்துவதாக காண்பிக்கப்பட்டது.
உரை வெளியாகிய மறுநிமிடங்களிலேயே அவர் யார்? என்ன நோக்கத்திற்காக வெளிப்பட்டுள்ளார்? யார் அவரை இயக்குவது போன்ற விடயங்கள் ஈழத் தமிழ் சமூகத்தின் ஊடகங்களாலும் ஆய்வாளர்களாலும் வெளிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில நாட்களிலேயே போலித் துவாரகாவின் சாயம் வெளுத்து உண்மை அனைவருக்கும் புலப்பட்டது.
இமாலயப் பிரகடனம்
ஈழத் தமிழ் மக்களின் அரசியலில் இவ்வாறு பல சூழ்ச்சிகள் பின்னப்படும் நிலையில்தான், இமாலயப் பிரகடனம் என்ற ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவும் மற்றொரு சூழ்ச்சியா என்ற பார்வையில்தான் ஈழத் தமிழ் மக்கள் சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள். அதற்கு பல தெளிவான காரணங்களும் காணப்படுகின்றன.
நாட்டில் உள்ள தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் சற்றும் மதிக்காமல், அவர்களின் கருத்துக்களை கேட்காமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுகிறோம் என்று கூறிக் கொண்டு இத்தகைய இமாலயப் பிரகடனம் என்ற ஒன்றை முன்னெடுப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு பௌத்த குருமார்களுடன் இணைந்து இந்தப் பிரகடனத்தை மேற்கொண்டுள்ளது. அத்துடன் குறித்த பிரகடனம் அதிபர் ரணிலிடம் இரு தரப்பும் இணைந்து கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களின் முன்னர் ரணில் தமிழ் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது தீர்வு விடயத்தில் எவ்வாறு கடினமாக நடந்துகொண்டார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அதன் போது அவர் தீர்வு விடயத்தில் காட்டிய அசிரத்தையும் கடும்போக்கும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவர் கொண்டிருந்த கரிசனையின் உண்மை நிலையைப் புலப்படுத்தியது.
ஏன் தமிழர்கள் போராடுகின்றனர்...
ஈழத் தமிழ் மக்கள் இழந்த இறைமைக்காக கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுத்த ஈழத் தமிழ் மக்கள், அந்த அகிம்சைக்கு பதிலாக வன்முறை நிகழ்த்தப்பட்டபோது ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
இதனால் ஈழத்தில் முப்பது ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி தனிநாட்டுக்கான போராட்டம் இடம்பெற்றது. தனிநாட்டுப் போராட்டம் வழியாக தமிழ் ஈழத்தில் நிழல் அரசொன்று உருவாக்கப்பட்டது. எனினும் அக்கால கட்டங்களிலும் இலங்கை அரசுடன் விட்டுக்கொடுப்புடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு கோரிய அரசியல் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்ததுடன் அக் காலகட்டங்களிலும் இனவழிப்புப் போரை நடாத்தி முடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாய் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் தமிழ் ஈழ மக்கள் ஜனநாய வழியில் தேர்தல்கள் வாயிலாக தமது அரசியல் கோரிக்கையை முன்வைக்கத் தயங்கவில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில் சுயாட்சி என்றும் ஒரு நாட்டிற்குள் இரு தேசங்கள் என்றும் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை தேர்தல்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் வடக்கு கிழக்கில் இலங்கை அரசு நடாத்திய பல்வேறு ஆணைக்குழுக்கள், கருத்தறியும் அமர்வுகள் வழியாகவும் தமிழர் தேசக் கோரிக்கையை ஈழமக்கள் வலியுறுத்தியே வந்துள்ளனர்.
தாய் பகை, குட்டி உறவா...
கடந்த காலத்தில், அதாவது மகிந்த ராஜபக்ச காலத்தில், தமிழீழத்தை கைவிட்டுள்ளோம், தனிநாடடுக் கோரிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி வழியாக தெரிவித்து “கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்வதுபோல” செய்த பிறகும் கூட தமிழ் தலைவர்கள், எதைப் பேசினாலும் தனிநாடு கேட்கிறார்கள், தமிழீழம் கேட்கிறார்கள் என்று இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் தாயகத்தில் உள்ள மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பகையாளிகள் என்ற விதத்தில் அணுகும் இலங்கை அரசு, புலம்பெயர் தேச அமைப்பு ஒன்றுடன் உறவாக இருப்பதே சந்தேகங்களை கிளப்புகிறது.
தாயகத்தின் குரலாகவே, புலம்பெயர் தேசம் இருக்கிறது. தாய் நிலத்தில் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அடங்காத குரலின் வெளிப்பாடாகவே ஈழ விடுதலையையும் தாயக விடுதலையையும் புலம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தாயக மக்களின் கோரிக்கையை பிரதிபலிக்காத அல்லது கைவிட்ட ஒரு அமைப்புடன் இலங்கை அரசு பேசி தொடர்ந்து ஈழத் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறது.
உலகத் தமிழர் பேரவையுடன் பேசுகின்ற இலங்கை அரசு, நாடு கடந்த தமிழீழ அமைப்புடன் பேசுமா? அதுவும் ஒரு புலம்பெயர் அமைப்பே. அந்த அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடமுடியுமா? தாய் பகை, குட்டி உறவு என்ற அரசியல் வித்தைதான் இங்கு நடக்கிறதா?
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஒரு சமிக்ஞையை காட்டிக் கொண்டு, தாயகத்தில் உள்ள தமிழர்களுடன் தவறான சமிக்ஞைகளை இலங்கை அரசு காட்டுவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். தற்போதைய சூழலிலும் கூட தமிழ் மக்கள்மீது தொடர்கின்ற பல உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அது மாத்திரமின்றி, கடந்த மாவீரர் தினத்தின் போது தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இனவழிப்பொன்று கண்ணுக்கு தெரியாமல் தொடரும் சூழலில், இமாலயப் பிரகடனத்தின் வழியாக எஞ்சியுள்ள ஈழத் தமிழ் இனத்தையும் இல்லாமல் செய்ய சூழ்ச்சி செய்கிறதா இலங்கை அரசு என்பதே ஈழத் தமிழ் மக்களின் இன்றைய சந்தேகமாக இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.