பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழர் நியமனம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராக கீதநாத் காசிலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இதற்கு முன்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் ஆவார்.
அண்மையில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் மறுசீரமைப்பின் போது அவர் இந்த குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில்
இதேவேளை காசிலிங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்ற நிலையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீதநாத் காசிலிங்கம் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது வடக்கு மற்றும் கிழக்கில் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான பிரதமரின் விசேட பிரதிநிதியாக செயற்பட்டார்.
சாகர காரியவசம்
இந்தநிலையில் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவைக்கு நியமிக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |