நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசு! சுட்டிக்காட்டும் ஜி.எல். பீரிஸ்
இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்துவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள எந்தவொரு நாடும் இவ்வாறான திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இந்த நிலை தொடர்பில் தான் கவலையடைவதாக இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையின் கடன்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் ”இலங்கை 27 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கடன்களை மீள செலுத்துவது தொடர்பான எந்தவொரு பேச்சுக்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை.
இந்த நடவடிக்கையில் இலங்கை தோல்வியடைந்துள்ளது. கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான சரியான திட்டம் முன்னெடுக்கப்படாது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்ள முடியாது.
போலி பிரச்சாரம்
இந்த நிலையில், தற்போது அரசாங்கம் தற்போது போலி பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. அத்துடன், கடன்களின் வட்டி வீதங்களை குறைக்கவும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடிப்பதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது.
போலி கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறது. இதுவே தற்போதைய இலங்கையின் உண்மை நிலை. இந்த மாதத்துக்கு முன்னர் கடன் வழங்குனர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டுவதாக அரசாங்கம் கூறியது.
எனினும், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சில முக்கிய தரப்பினரால் மற்றும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதுள்ளது. நிதி அமைச்சு இந்த உண்மையை கூற மறுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |