எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜே.வி.பி! எதிர்க்கும் மொட்டு கட்சி
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது மற்றும் எதிர்ப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
இதன்படி, எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ள நிலையில், அதனை ஆதரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை அடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் இணையவழி காப்பு சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தியதை முன்னிலைப்படுத்தி, அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர தீர்மானித்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட சிலர் நேற்றைய தினம் இந்த பிரேரணையில் கையெழுத்திட்டனர்.
அத்துடன், இந்த பிரேரணையை எதிர்வரும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பிரேரணையை எதிர்ப்பதாகவும் சபாநாயகருக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் கூறியிருந்தார்.
ஆதரவு-எதிர்ப்பு
இதையடுத்து, குறித்த பிரேரணைக்கு ஆதரவளிப்பது மற்றும் அதனை எதிர்ப்பது தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை ஆதரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரேரணை சபாநாயகருக்கு எதிரானது அல்ல எனவும் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இணையவழி காப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தோற்கடிக்கப்படும் பிரேரணை
இதேவேளை, நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால், நீதியின் பக்கம் நிற்கும் அமைச்சர்களால் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |