நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : ஐ.ம.ச முன்வைத்துள்ள கோரிக்கை!
அரசாங்கத்தின் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
இந்த சட்டமூலத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சட்டமூலம்
அரசாங்கத்தின் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 24 ஆம் திகதி 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தாக ஹர்ஷண ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரைவில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
இவ்வாறான பின்னணியில், குறித்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அனுமதிக்க கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக கட்சித் தலைவர் கூட்டமொன்றை நடத்துமாறு ஹர்ஷண ராஜகருணா கோரியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கமைய குறித்த சட்டமூலம் மாற்றியமைக்கப்படாமல் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதெனவும், அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் நீதித்துறை மற்றும் அரசியலமைப்புக்கிடையில் இது குழப்பங்களை தோற்றுவிக்குமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |