கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து நகர்வு
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த நாடாளுமன்ற அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் பொதுத் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த ஆண்டின் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத் தேர்தலை முடியாத நிலை ஏற்படுமென்பதால், இந்த ஆண்டின் நிறைவுக்கு முன்னதாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு தயாராகும் பொதுஜன பெரமுன
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான பேச்சுக்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.