பதவி நீக்கப்படுவாரா சரத் பொன்சேகா ...!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பதவி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதனை அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தாலும், அவரை பதவி நீக்குவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என முஜிபர் ரஹ்மான் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கட்சியின் கொள்கைகளை மீறும் வகையிலும் சரத் பொன்சேகா அண்மை நாட்களில் செயல்படுவதாக அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கட்சிக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதாக முஜிபர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
விமர்சனம்
இது தொடர்பான குழப்பங்களை கட்சித் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி, சரத் பொன்சேகா தீர்த்துக் கொள்வார் என தான் எதிர்ப்பார்ப்பதாக முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேகா, அதே அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்த தவறான தீர்மானத்தை மேற்கொள்ள மாட்டார் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |