சபாநாயகருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் காவல்துறை மா அதிபரை (IGP) நியமிப்பது அவருக்கு எதிராக தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதாக ஜனாதிபதி நாடாளுமன்ற சபாநாயகருக்கு (Parliament Speaker) அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காவல்துறை மா அதிபர் பதவி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) இன்று (26) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு தடை
நேற்றுமுன் தினம் (24) அவசரக் கூட்டத்தை கூட்டிய அமைச்சரவை, இந்த விவகாரத்தின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து இரண்டு நாட்களுக்குள் காவல்துறை மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தனது பதிலை அறிவிக்க முடிவு செய்திருந்தது.
தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் தடை விதித்து உயர் நீதிமன்றம் புதன்கிழமை (24) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை தொடர்வதற்கு அனுமதி வழங்கியதை அடுத்தே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால உத்தரவின் போது, காவல்துறை மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |