தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா பொது வேட்பாளர் தெரிவு...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, இலங்கையின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யார், என்பது தொடர்பான எதிர்பார்ப்பு இலங்கை மக்களை கடந்து வெளிநாடுகள் மத்தியிலும் அதிகம் காணப்படுகின்றது. சில அரசியல் விமர்சகர்கள் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இத் தேர்தலில் மறைமுகமாக தாக்கம் செலுத்தலாம் எனக் கூறுகின்றனர்.
அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படுத்தவுள்ள விளைவுகள் பற்றி ஆராயும் வகையில் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட 18 வேட்பாளருக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
இதில் சிங்கள வேட்பாளர்களில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரமேதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, விஜயதாஸ ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றவர்கள் முதன்மை பெறுகின்றனர்.
அது போல், தமிழ்மக்களை தேசமாக திரளச் செய்வதற்காகவும், தமிழ்மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ்ப் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரால் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்குவது சாத்தியமற்றதென விமர்சித்த பலரின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில், தமிழ்ப்பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் தமிழ்மக்கள் மத்தியில் திரட்சியை உருவாக்கும் நோக்கில் சில தமிழர்கள் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, 1982 ஆம் ஆண்டு ஜே. ஆர் ஜெயவர்த்தனவுக்கு எதிராக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கினார்.
அவருக்கு அப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவு கிடைக்கவில்லை, எனினும் தனித்து ஒரு கட்சியின் வேட்பாளராக களமிறங்கி கிட்டத்தட்ட 173, 934 வாக்குக்களை பெற்றுக் கொண்டார்.
அதுபோல் 2010, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பளராக களமிறங்கினார். எனினும் அவருக்கு பெரிதளவு தமிழ்மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஏன் அவரது சொந்தக் கட்சியான ரெலோ கூட ஆதரவு வழங்க முன்வரவில்லை.
ஆனால் இன்று, தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் அரியநேத்திரனுக்கு தமிழ்மக்கள் பொது சபையும் தமிழ் கட்சிகளும் இணைந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஆதரவும், ஆசியும் கிடைத்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவு
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியல் தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் கருவி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுபோல், தமிழர் தாயக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மக்களின் உணர்வை ஒன்றிணைக்கும் வகையில் கிழக்கிலிருந்து தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தெடுக்கப்பட்டுள்ளமையும் வரவேற்கத்தக்க முடிவுதான்.
ஆனால், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தலில்களிலும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து வந்த தமிழ்மக்களுக்கு தமிழ்ப்பொது வேட்பாளரால் தமிழ்மக்களின் அரசியலில் எவ்வாறான மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனதில், தமிழ் மக்களை தேசமாக திரளச் செய்யும் சக்தி தமிழ்த்தேசியத் தேசிய பொதுக் கட்டமைப்புக்கு உண்டா...
இன்றுவரை தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படாமைக்கான காரணம் என்ன..தமிழ் பொது வேட்பாளருக்கு பதில் தமிழ்மக்கள் ஏன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறுவதைப் போல ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கூடாது... எனும் கேள்விகள் தோற்றம் பெற வழிவகுத்துள்ளது.
முதலாவது, தமிழ் மக்களை தேசமா திரழச் செய்யும் சக்தி தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பிடம் உண்டா... எனும் கேள்விக்கு பதில் நிச்சயமாக உண்டு. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் குறித்த சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்படாமல், தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படுவார்கள் எனின் தமிழ் மக்கள் திரட்சி என்பது இயல்பாக உருவாகும்.
அதுபோல், வெறுமனே திருகோணமலை, அம்பறை, மட்டக்களப்பு , யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக பிரதிநிதிகளை கொண்ட குறுகிய வட்டத்துள் தமிழ்ப் பொதுச்சபை அடக்கப்படாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளையும் தமிழ்ப் பொதுச்சபை உள்வாக்கி கொண்டால் தமிழ்மக்களை ஓர் அணியாக ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி நிரலை மிக விரைவாக நிறைவேற்ற முடியும்.
தமிழ்த்தேசிய உணர்வு
இரண்டாவது, அண்மையில் தமிழ்ப் பொதுச்சபை உறுப்பினரான சி.அ.யோதிலிங்கத்தின் முகநூலில், அவரின் முகநூல் நண்பர் ஒருவர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனம் ( Election Manifesto ) இதுவரை வெளியிடப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இக் கேள்விக்கு பதிலளித்த யோதிலிங்கம் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். இன்று பல தமிழ்மக்கள் மத்தியில் இதுவரை தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படாதது ஏன் என்ற கேள்வி உள்ளது.
பல தமிழ்தேசிய பற்றாளர்கள் தமது பரிபூரணமாக ஆதரவை தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்புக்கு வழங்காமல் விலகி நிற்பதற்கும், தமது நிர்மாண விமர்சனங்களை முன்வைக்க தயங்குவதற்கும் பிரதான காரணம் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படாமை எனலாம்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடத் தாமதம் ஏற்பட்டாலும் இதயசுத்தியுடன் நேர்மையாக தமிழ்த்தேசிய உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்ப்பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுமாயின், தமிழ் மக்களின் பரிபூரண ஆதரவு தமிழ்ப்பொது வேட்பாளருக்கு கிடைக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
யதார்த்தத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காணப்படுமாயின், தற்கால தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளர்ச்சியினை சரியான முறையில் கையாள்வதன் மூலம் தமிழ்ப்பொதுவேட்பாளர் விஞ்ஞாபனத்தை மிக விரைவிலேயே தமிழ் மக்கள் முன் கொண்டுசேர்த்து விடலாம்.
மூன்றாவது, பல இனமக்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு ஜனாநாயக நாட்டில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறுவதைப்போல தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை பகிஸ்கரிப்பது, இலங்கையில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகின்றது எனவும் ஜனநாயகம் எனும் பெயரில் சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றது எனும் வின்பத்தை வெளிப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பு
எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இக் கருத்தியல் தமிழ்மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதா... ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பு கருத்தியலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளதா எனும் கேள்விக்கு பதில் இல்லை என்றவாறே இதுவரை காணப்படுகின்றது.
அதைவிட, இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை ஈழத் தமிழர் அரசியல் உரிமை மறுக்கப்படுகின்றமை உலகறிந்ததே, எனவே பகிஷ்கரிப்பின் மூலம் மீண்டும் சிங்களப் பேரினவாதிகளால் தமிழ்மக்களின் அரசியல் உரிமை மறுக்கப்படுகின்றமையை நிறுவுவதற்கு பதில், தமிழ்ப் பொதுவேட்பாளர் துணை கொண்டு, ஒருமித்த குரலில் தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை சர்வதேச சமூகத்திற்கு தமிழ்மக்கள் வெளிப்படுத்தும் சாலச் சிறந்த வழிமுறையாக தமிழ் பொதுவேட்பாளர் அமைகின்றார்.
எனினும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினர் தமிழ்த்தேசிய உணர்வுடன் தான் குறித்த நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கின்றார்களா... என்ற ஐயமும் தமிழ்தேசிய பற்றாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஏனெனில், இன்று சில தமிழ் இனத்துரோகிகள் தமிழ்த்தேசிய அரசியல் என்பது போலியானது, தேவையற்றது, பிற்போக்கான சிந்தனை, தமிழ் இனவெறியின் வெளிப்பாடு எனும் கருத்தியல்களை திட்டமிட்டு தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் விதைக்கின்றனர்.
அவ்வாறான இனத்துரோகிகள் நன்கறிவார்கள், என்றைக்கு தமிழ்மக்கள் மனதில் தமிழ்த்தேசிய அரசியலில் மீது நம்பிக்கை குறைகின்றதோ அன்றைக்கு தமிழர் பண்பாடும் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும் என்பதை, எத்தனையோ தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தம் இன்னுயிரை தியாகம் செய்ததன் விளைவே இன்றும் ஈழமண்ணில் தமிழர் பண்பாடு நிலைத்திருக்க காரணம்.
இதற்கு சான்று இன்றும் வடக்கு கிழக்கில் ஈழவிடுதலைக்காக போராடிய பலர் எம் கண்முன் அங்கவீனர்களாக நடமாடுகின்றனர். இவர்களின் தியாகத்தை மனதில் கொண்டு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும், அதைவிடுத்து தமது தனிப்பட்ட சுயலாபத்திற்காகவும், வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்களுக்கு தாளம் போடும் வகையிலும் இவர்கள் செயற்பாடுகள் ஆயின், வரலாறு தமிழ் இன அழிவுக்கு வழிவகுத்த தமிழினத் துரோகிகளாக தமிழ்த்தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள் என்பதே திண்ணம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sathangani அவரால் எழுதப்பட்டு, 14 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.